Get Adobe Flash player
Home வி.ஐ.பி. சமூக சேவையாளர்கள் நாச்சிமுத்து செட்டியார்
  • image
  • image

நாச்சிமுத்து செட்டியார்


நாச்சிமுத்து செட்டியார்:-

                     கோவை மாவட்டம் பல்லடம் தாலுகா வதம்பச்சேரி கிராமம் சின்ன வதம்பச்சேரியில் சொக்கஞ்செட்டியார் மல்லம்மாள் மேல் நிலைப்பள்ளி வருடா வருடம் தேர்வில் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்று முதன்மையாக விளங்கி வருகிறது.சொக்கஞ்செட்டியார் மல்லம்மாள் ஆகியோருக்கு ஒரு மகளும் நான்கு புதல்வர்களும் பிறந்தார்கள். அந்த நான்கு புதல்வர்களில் இரண்டாவது புதல்வரின் பெயர் திரு.எஸ். சித்தப்ப செட்டியார் ஆவார்.  அவருக்கும் அவர்தம் மனைவி சின்னமாளுக்கும் பிறந்த மூத்தவர்தான் வதம்பச்சேரி சித்தப்ப செட்டியார் நாச்சிமுத்து என்பவர்.  அவர் வதம்பச்சேரியில் 24-12-1919 தேதியன்று பிறந்தார்.  நடுத்தர வசதி  படைத்த குடும்பம் தான்.  ஆனால், தாய் மாமன் வகை குடும்பம் வசதியான குடும்பம்.  அவர்களின் உதவியுடன், அவர்களுடன் சேர்ந்து வதம்பச் சேரியிலேயே சாயப்பட்டறை வைத்து கைத்தறிச் சேலைகள் தயார் செய்து ,பல ஊர்களில் உள்ள சந்தைகளில் வியாபாரம் செய்து வந்தார்கள். பெற்றோர்களுக்கு கல்வியறிவு என்பது மிகவும் குறைவுதான். ஆனால் தொழிலில் மிகவும் சிறந்து விளங்கினார்கள். ஆகவே இவருடைய பெற்றோர்கள் தம் மக்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார்கள். நாச்சிமுத்துவை வதம்பச் சேரியிலுள்ள ஆரம்பப் பள்ளியில் சேர்த்து ஐந்தாம் வகுப்பு வரையில் படிக்க வைத்தார்கள்.  பின்னர் திருப்பூரிலுள்ள கே.எஸ். சப்பிரமணிய செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்து எஸ்.எஸ்.எல்.சி வரை படிக்க வைத்தார்கள்.   பின்பு  பெங்களூரிலுள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இண்டர்மீடியத்தில் சேர்த்தார்கள்.  வதம்பச் சேரியில் பிறந்து வளர்ந்தவர்களில், முதன்முதலில் கல்லூரியில் சேர்ந்து கல்லூரிப் படிப்பை படித்து வெற்றி பெற்ற நபர் இவர் தான் என்பதும் மிகவும் பெருமையுடையதாகும். 

               கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு வியாபாரத்தில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வியாபாரத்தை கவனித்து வந்தார்.  அந்த சமயத்தில் தான் திருப்பூர் தனலக்ஷ்மி மில்ஸ் மேனேஜிங் ஏஜெண்டும் கல்விக் கொடையாளருமான திரு.எம்.என்.முருகப்ப செட்டியாரின் மகளான தனலக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டார்.  திரு.எம்.என்.முருகப்ப செட்டியார் குடும்பம் அவர்கள் தந்தை பெயரில் நஞ்சப்பா உயர்நிலைப் பள்ளியையும், தாயார் பெயரில் செல்லம்மா தங்கும் விடுதியையும் கட்டிக் கொடுத்தார்கள்.  பின்பு தம் தந்தை பெயரில் எஸ்.சித்தப்ப செட்டியார் &சன்ஸ் என்று திருப்பூரிலும், சிலோனில் கொழும்பிலும், கண்டியிலும் வியாபாரம் செய்து வந்தார்கள். அந்த சமயத்தில் தான் அவர் கோவையில் 1958ல் எஸ். சித்தப்ப செட்டியார் & கோ என்ற விலாசத்தில் மொத்த கைத்தறி ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்கள்.  அப்பொழுதுதான் இவருக்கு கோவையில் மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது.  அப்பொழுதுதான் நாச்சிமுத்து செட்டியார் என்று மிகவும் மதிப்பாக அழைக்கப்பட்டார்.  

              அதுசமயம், காலஞ்சென்ற சபாநாயகர் திரு.சிவசண்முகம் பிள்ளை அவர்களின் நட்பு கிடைத்தது.  திரு. சிவசண்முகம் பிள்ளை அவர்களின் பேச்சுக்கிணங்க, அவரால் மதராஸ் வண்ணாரப்பேட்டையில் திரு. மகாத்மா காந்தி அடிகளால் அடிக்கல் நாட்டப் பெற்று ஆதி திராவிடர் சமூக சேவகர் சங்கத்தை ஆரம்பித்து நடத்தி வந்த ஸ்தாபனத்திற்கு அந்தக் காலத்திலேயே ரூபாய் 10,000 நன்கொடை கொடுத்து அதில் பேட்ரன் ஆக பொறுப்பு வகித்து பொது சேவையில் நாட்டம் கொண்டவராக மாறினார்.  

               தம் உறவினர்கள் இரண்டு குடும்பங்களும் கல்வி சமூக சேவையில் ஈடுபட்டு வெற்றி அடைந்ததை அறிந்து தாமும் தம் சமூகத்திற்கும் மற்றும் எல்லா சமூகத்திற்கும் தம்மால் முடிந்தளவு சமூக சேவை செய்ய வேண்டும் என்று கனவு கண்டார்.  அந்த கனவின் பொருள் என்னவென்றால் பொது விடுதிகள் ஏற்படுத்த வேண்டும் என்றும், நல்ல படிப்பை சரியான முறையில் சொல்லிக் கொடுக்கவோ அல்லது சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்யவோ வேண்டும் என்று கனவு கண்டார். அதன் பலனாகத்தான் சமூக சேவை செய்ய ஒரு டிரஸ்ட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரு நல்ல யோசனை உதித்தது.  13-09-1972 ம் தேதியன்று " ஸ்ரீ சௌடேஸ்வரி சேரிட்டபிள் டிரஸ்ட்" என்ற பெயரை வைத்து டிரஸ்ட் ஸ்தாபனம் ஆரம்பித்து டிரஸ்ட் ஸ்தாபகர் ஆனார்.  

                தவிர, ஸ்தாபகராக இருந்து கொண்டு டிரஸ்ட் வேலைகளையும் கவனித்து கொண்டு தன் வியாபாரத்தையும் கவனித்து வந்தார்.  டிரஸ்ட்டுக்கு பணவசதி வேண்டுமென்று நம் சமூகத்தை சார்ந்த பல நபர்களை ஆயுட்கால மெம்பர்களாக சேர்த்தார். மேலும் கரூப் சீட்டுகளும் சேர்க்கப்பட்டது. அதன் பயனாகத்தான் மேற்கு ராமலிங்க ரோட்டில் ஒரு இடத்தை வாங்கி கட்டிடம் கட்டி அதற்கு "ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி ஹால்"  என்ற சமூக நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  அது நல்ல முறையில் நடந்து வருகிறது.  
           
              அதற்கு முன்னதாக ஆர்.எஸ்.புரம், டி.பி. ரோட்டில் ஒரு வாடகைக் கட்டிடத்தில் 01-06-1977ல் ஸ்ரீ சௌடேஸ்வரி வித்யாலயா ஆரம்பிக்கப்பட்டது.  இது ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே அதன் கரஸ்பாண்டெண்டாக இருந்து தினமும் இரு முறை பள்ளிக்கு சென்று நடைமுறைகளை கவனித்து வந்தார்.  

              அதுவும் நன்கு வளர்ந்து இடம் போதாமையால் சொந்த இடம் வாங்கி பள்ளிக்கு கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.  அதன் பேரில் சொக்கம்புதூரில் 5ஏக்கர் காலி இடம் வாங்கப்பட்டது.  அதில் டிரஸ்ட்  மெம்பர்களின் உதவியுடன் பள்ளிக்கு கட்டிடம் கட்டப்பட்டது.   ஆனால் பள்ளிக் கட்டிடம் கட்டி வரும் சமயமே 13-03-1996ல் அவர் நம்மை விட்டு விண்ணுலகம் அடைந்து விட்டார்.அது கோவையிலுள்ள நம் சமூகத்தினருக்கு பேரிழப்பு ஆகும்.  அவர் கடைசி மூச்சு உள்ள வரையிலும் நம் டிரஸ்ட் பற்றியும் நம் பள்ளியின் முன்னேற்றத்தைப் பற்றியும் தான் நினைத்து பேசி வந்தார் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.  கோவையில் நம் சமூகத்தைப்  புகழ்ந்து பேசுவதற்கு காரணகர்த்தா வி.எஸ். நாச்சி முத்து செட்டியார் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

                    

                        

Last Updated (Sunday, 23 October 2011 13:29)

 
  • image
  • image